சென்னை மெரினாவில் ரோப் கார் சேவையை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டம்
சென்னை, 17 ஜூன் (ஹி.ச.) சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை அறிமுகப்படுத்தும் மாநகராட்சியின் திட்டம் மீண்டும் கவனம் பெற்று வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநரா
Marina Rope Car


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)

சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை அறிமுகப்படுத்தும் மாநகராட்சியின் திட்டம் மீண்டும் கவனம் பெற்று வருகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநராட்சி தெரிவித்துள்ளது.

2026-27 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகளில் ஒன்றான இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது தொழில்நுட்ப மற்றும் நிதி ரீதியான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மெரினா கடற்கரையில் தொழிலாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப் கார் சேவையை அமைத்து, கடற்கரையின் அழகை வான்வழியில் இருந்து ரசிக்கும் வகையில் சுற்றுலா வசதியை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த யோசனை முதன்முதலில் 2022 ஆம் ஆண்டு வார்டு 104 கவுன்சிலர் டி.வி. செம்மொழியால் முன்வைக்கப்பட்டது. பின்னர் திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக 2024ஆம் ஆண்டு மாநகராட்சி ஆலோசகரை நியமிக்கும் வகையில் டெண்டர் வெளியிட்டது. மண் பரிசோதனை, பொருளாதார மதிப்பீடு மற்றும் வடிவமைப்பு ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தன.

இதன் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி மாதம் தனியார் நிறுவனம் ஒன்று சுமார் 30 அடி ஆழம் வரை துளையிட்டு மண் பரிசோதனை மேற்கொண்டது. அப்போது கலங்கரை விளக்கம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சில சர்ச்சைகளும் எழுந்தன.

திட்டத்தின் நிதி சாத்தியக்கூறு தொடர்பாக சில சவால்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரிவான திட்ட அறிக்கையில் திட்டச் செலவு அதிகமாக இருப்பது தெரியவந்ததால், தற்போது மாற்று வழித்தடங்களை பரிசீலிக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக கடற்கரை மணற்பரப்பில் நேரடியாக அமைப்பதற்கு பதிலாக, அருகிலுள்ள சேவைச் சாலையில் ரோப் கார் அமைக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கட்டுமான செலவைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியான எதிர்ப்புகளையும் சமாளிக்க முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்தத் திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்து உள்ளார். மேலும், பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், மீனவர் அமைப்புகள் சில இந்தத் திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உள்ளூர் மக்களின் கருத்துகளை கேட்காமல் மண் பரிசோதனை நடத்தப்பட்டதாக தென்னிந்திய மீனவர் நலச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பு அரசும் மாநகராட்சியும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எனினும், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ அனுமதிகளும் பெறப்பட்ட பிறகே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

சுற்றுலா வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் மக்களின் நலன் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை பேணும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN