Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 17 ஜூன் (ஹி.ச.)
நாடு முழுவதும் நடைபெறவுள்ள நீட் மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து பிரபல மெசேஜிங் செயலியான (டெலிகிராம்)மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மே 3-ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வின் போது வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் பரவியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தேர்வு நேர்மையை பாதுகாக்கும் நோக்கில் தேசிய தேர்வு முகமை (NTA) பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, வருகிற 21-ந்தேதி நடைபெறவுள்ள நீட்(NEET)மறுதேர்வை கருத்தில் கொண்டு, வினாத்தாள் மீண்டும் கசிவதைத் தடுக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக டெலிகிராம் செயலிக்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, டெலிகிராம்(Telegram) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Pavel Durov இந்த நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாகவும், ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து பயனாளர்களையும் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவது சரியானதல்ல என அவர் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, தடை தொடர்பான தகவல்கள் குறித்து உறுதிப்படுத்தப்படாத நிலை தொடர்கிறது.
மொத்தத்தில், நீட்(NEET) தேர்வு பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA