Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் மற்றும் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் தற்போது சுமார் 52 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்த சேமிப்பு 6,148 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் நீர் இருப்பு கணிசமாக குறைந்துள்ளது.
3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 1,664 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பதாகவும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் வெறும் 84 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோழவரம் ஏரியின் நீர்மட்டம் மிகவும் குறைந்து, ஏரியின் பெரும்பகுதி வறண்ட நிலப்பரப்பாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
புழல் ஏரியை ஒட்டியுள்ள சூரப்பட்டு, கண்ணப்பசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட நிலப்பரப்பு தெளிவாகக் காணப்படுவதாகவும், பூண்டி மற்றும் புழல் நீர்த்தேக்கங்களிலும் வறண்ட பகுதிகள் உருவாகி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த 2019ஆம் ஆண்டு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, பிற மாவட்டங்களில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டதையும், பல விடுதிகள் மற்றும் உணவகங்கள் பாதிக்கப்பட்டதையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
எனவே, வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக நீர்த்தேக்கங்களை தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நீர் மேலாண்மை திட்டங்களை தீவிரப்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P