உங்களை அப்பா மாதிரி நினைத்தேன் - பள்ளி அலுவலகத்தில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்,கதறிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு
ராமநாதபுரம், 17 ஜூன் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு பாலியல் சீண்டல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாத
பாலியல் சீண்டல்


ராமநாதபுரம், 17 ஜூன் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு பாலியல் சீண்டல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கதறி அழுதபடி பேசிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முகமது சதக் குழுமத்திற்குச் சொந்தமான முகமது சதக் தஸ்தகீர் சிபிஎஸ்இ பள்ளியில், கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் பெண் ஒருவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி நேரம் முடிந்த பிறகு, அலுவலகத்தில் தனியாக இருந்தபோது, அதே பள்ளியில் கணினி மேற்பார்வையாளராக பணிபுரியும் ஒருவர் அவரிடம் ஆறுதல் கூறுவதாக நெருங்கி, தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அலறியபடி அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

மறுநாள் அந்தப் பெண்ணை தொடர்புகொண்டதாகக் கூறப்படும் நபர்,

ஆறுதல் கூறுவதற்காகத்தான் அவ்வாறு நடந்து கொண்டேன் என தெரிவித்ததாகவும், அதற்கு பதிலளித்த பெண்,

உங்களை அப்பா மாதிரி நினைத்தேன். உங்கள் மகள், தங்கை என்றால் இப்படிச் செய்வீர்களா?” என்று கதறி அழுதபடி பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam