கவர்னர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது
சென்னை, 17 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றி கழக அரசின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (ஜூன் 18) தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றுகிறார். இதற்காக, கிண்டியி
Legislative Assembly session


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றி கழக அரசின் முதல் சட்டசபை கூட்டம் நாளை

(ஜூன் 18) தொடங்குகிறது.

நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றுகிறார்.

இதற்காக, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இருந்து காலை 9.30 மணியளவில் கவர்னர் அர்லேகர் காரில் புறப்படுகிறார்.

காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் அவரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்கிறார்.

அதன்பின்னர், கவர்னர் அர்லேகர் அவைக்கு அழைத்து வரப்படுகிறார். காலை 10 மணிக்கு சபாநாயகர் இருக்கைக்கு வரும் அவர், தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்குகிறார்.

இந்த உரை சுமார் 1 மணி நேரம் இடம் பெறும் என்று தெரிகிறது.

அதன்பின்னர், கவர்னர் அர்லேகரின் உரையை, வலதுபுற இருக்கையில் அமர்ந்திருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார்.

இடதுபுற இருக்கையில் கவர்னரின் முதன்மை செயலாளர் ஷஜன் சிங் சவான் அமர்ந்திருப்பார்.

கூட்டம் முடிந்ததும் அனைத்து உறுப்பினர்களிடமும் விடைபெற்று கவர்னர் அர்லேகர் புறப்பட்டு செல்வார்.

அதன்பின்னர், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.

அனேகமாக 3 அல்லது 4 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

Hindusthan Samachar / vidya.b