Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூன் (ஹி.ச)
தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை HD KSOE நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தென் கொரியாவை தலைமையகமாகக் கொண்ட HD ஹுண்டாய் குழுமத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான குழுவினர், திட்டத்தின் செயல்பாட்டு முன்னேற்றங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் விரிவாக கலந்துரையாடினர்.
உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான HD KSOE, தூத்துக்குடியில் நவீன கப்பல் கட்டுமானத் தொகுதியை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் உருவாகவுள்ள இந்த மிகப்பெரிய திட்டத்தில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.38,000 கோடி) முதலீடு செய்யப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் என்றும், துணைத் தொழில்கள் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலிகள் வளர்ச்சியடைந்து மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக சிப்காட் மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையம் இணைந்து நேஷனல் ஷிப்பில்டிங் அண்ட் ஹெவி இன்டஸ்ட்ரீஸ் பார்க் தமிழ்நாடு லிமிடெட் (NSHIPTN) என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளன.
மேலும், கப்பல் கட்டுமானத் தொகுதி அமைப்பதற்கான முதல் கட்ட கொள்கை அளவிலான ஒப்புதலையும் இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து பெற்றுள்ளது.
சந்திப்பின்போது திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து நிறுவன அதிகாரிகள் முதலமைச்சரிடம் விளக்கமளித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ