கட்சியை காட்டிக் கொடுத்தவர்களை தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் – விஜய்பாஸ்கர் விலகலுக்கு ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்
தமிழ்நாடு, 17 ஜூன் (ஹி.ச.) அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜய்பாஸ்கர் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியதையும், கட்சித் தலைமையை விமர்சித்ததையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்
ஆர் பி உதயகுமார்


தமிழ்நாடு, 17 ஜூன் (ஹி.ச.)

அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜய்பாஸ்கர் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியதையும், கட்சித் தலைமையை விமர்சித்ததையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர் கூறியதாவது ;

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை விமர்சித்து கட்சியை விட்டு வெளியேறும் நிர்வாகிகள் தொண்டர்களின் மனதை புண்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

அடையாளம், அதிகாரம், அரசியல் முகவரி உள்ளிட்ட அனைத்தையும் வழங்கிய கட்சியை சோதனையான நேரத்தில் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றார்.

விஜய்பாஸ்கரின் ராஜினாமாவை “வளர்த்த கடா மார்பில் பாய்வது போன்ற செயல்” என குறிப்பிட்ட அவர், கட்சியின் மூலம் கிடைத்த பதவிகள், செல்வாக்கு மற்றும் அரசியல் பலன்களை அனுபவித்துவிட்டு, கட்சிக்கு சவாலான சூழல் ஏற்பட்டபோது தலைமையை குறை கூறுவது நியாயமல்ல என்று விமர்சித்தார்.

மேலும், அதிமுகவில் சேருவதற்கு முன் இருந்த நிலைக்குத் திரும்பாமல், கட்சியின் மூலம் பெற்ற அனைத்து பலன்களையும் தக்கவைத்துக் கொண்டு வேறு அரசியல் பாதையைத் தேர்வு செய்வது தவறான அணுகுமுறை என்றும் கூறினார்.

அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் எந்தவித பதவி எதிர்பார்ப்பும் இன்றி பல ஆண்டுகளாக உழைத்து வருவதாகவும், அவர்களின் நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் வகையிலான செயல்கள் பொறுப்பற்றவை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

எம்.ஜி.ஆர். தொடங்கி, ஜெ. ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை சிலர் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டு பின்னர் விட்டு செல்வதாகவும், இது தொண்டர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை விட்டு வெளியேறுபவர்களையும் அவர் விமர்சித்தார்.

கொள்கை வேறுபாடு இருந்தால் தேர்தலுக்கு முன்பே வெளியேறியிருக்கலாம்; தோல்விக்குப் பிறகு வெளியேறுவது சுயநல அரசியலின் வெளிப்பாடு என்றார்.

அதிமுக இன்னும் கோடிக்கணக்கான தொண்டர்களாலும் பொதுமக்களாலும் நம்பப்படும் இயக்கமாக இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைக்கும் வரை தொண்டர்கள் தொடர்ந்து உழைப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்கத்தையும் தலைமையையும் விமர்சித்து வெளியேறுபவர்களுக்கு காலம் தகுந்த பதிலை அளிக்கும் என்றும், கட்சியை காட்டிக் கொடுத்தவர்களை தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam