Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 17 ஜூன் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள சிறுவாலை கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ், அலமேலு தம்பதியினர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களது 15 வயது மகன் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ரமேஷ், அலமேலு தம்பதியினர், செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செங்கல் சூளை நடத்தி வரும் பிரபாகரன் என்பவரிடம் முன் பணமாக ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டு செங்கல் அறுக்கும் வேலை செய்து வந்துள்ளனர்.
ஆனால் செங்கல் அறுக்கும் வேலையை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே சொந்த ஊருக்கு திரும்பி விட்ட ரமேஷ், அலமேலு தம்பதியினரிடம் தான் முன் பணமாக அளித்த தொகையை திரும்ப தருமாறு கேட்டு பிரபாகரன் அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.
பணத்தை திருப்பி தருவதற்கு கால அவகாசம் தருமாறு கேட்டு ரமேஷ், அலமேலு தம்பதியினர் கெஞ்சியும் கூட கால அவகாசம் தராமல் பணத்தை உடனடியாக தருமாறு கேட்டு சிறுவாலை கிராமத்தில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி நேரில் சென்று பிரபாகரன் தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
எவ்வளவு மிரட்டியும் பணம் கிடைக்காததால் ஆத்திரத்தில் இருந்து வந்த பிரபாகரன், தனது நண்பருடன் நேற்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ரமேஷ், அலமேலு தம்பதியின் மகனை வழிமறித்து சரமாரியாக தாக்கினார்.
அவர்களிடம் இருந்து புத்தகப் பையுடன் தப்பியோட முயன்ற அச்சிறுவனை விடாமல் துரத்திச் சென்று விரட்டி, விரட்டி காலணியால் பிரபாகரன் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்து பாதிக்கப்பட்ட பள்ளிச் சிறுவன், வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த பள்ளி மாணவன், முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி செல்லும் வழியில் வழிமறித்து தனது மகனை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிச் சிறுவனின் தாய் அலமேலு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் தனது மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை ரமேஷ் கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு, கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கெடார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் வாங்கிய கடனுக்காக பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவரை பள்ளி செல்லும் வழியில் வழிமறித்து செருப்பால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / ANANDHAN