Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)
தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெறும் அரசியல் நாடகமாக இல்லாமல், மாநிலத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் செயல்திட்டங்களுடன் அமைய வேண்டும் என்று பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஶ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
கடந்த 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கடன் சுமை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், தற்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல தகவல்கள் ஏற்கனவே பொதுமக்கள் அறிந்தவையே என்றும் கூறினார்.
மின் வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி கடன் பெறப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் ஒவ்வொரு குடிமகனின் மீதும் ரூ.1.28 லட்சத்திற்கும் அதிகமான கடன் சுமை இருப்பதாகவும் கூறினார்.
200 யூனிட் இலவச மின்சாரம், பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
அதே நேரத்தில், தமிழகத்தின் உண்மையான நிதிநிலை வெளிச்சத்துக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
வருவாய் பற்றாக்குறையை குறைப்பது, மாநிலத்தின் சொந்த வரி வருவாயை அதிகரிப்பது, ஊழலை ஒழிப்பது, கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவது மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை திறம்பட நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் நிதிநிலையை மேம்படுத்த வேண்டும் என வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தினார்.
மேலும், தற்போதைய அரசு ஆண்டுதோறும் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, கடன் சுமையை குறைக்கவும் நிதிநிலையை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் பலன்களை மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P