தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னை, 17 ஜூன் (ஹி.ச.) மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை காரணம் காட்டி மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை முழுமையாக கைவிட வேண்டும் என தமிழக அரசை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது கு
தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை காரணம் காட்டி மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை முழுமையாக கைவிட வேண்டும் என தமிழக அரசை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் உயர்த்தப்படும் மின் கட்டணம் பொதுமக்களை பாதிக்காத வகையில் இருக்கும் என்ற எரிசக்தி துறை அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்களின் பேச்சு பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் அமைய வேண்டும்.

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படாது என தெரிவித்துக் கொண்டிருந்த எரிசக்தி துறை அமைச்சரின் தற்போதைய பேச்சு, கடந்த ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்ட குடியிருப்புகளுக்கான வருடாந்திர கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டு, வணிக நிறுவனங்களுக்கான கட்டணத்தை மட்டும் உயர்த்த முடிவு செய்திருப்பதையே வெளிப்படுத்துகிறது.

ஏற்கனவே வணிக நிறுவனங்களுக்குப் பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் ஆயிரக்கணக்கான சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, அதில் பணியாற்றி வந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், மீண்டும் ஒருமுறை மின்கட்டண உயர்வு ஏற்பட்டால் மீதமுள்ள தொழில் நிறுவனங்களும் முடங்கும் அபாயம் ஏற்படும்.

அதோடு, குடியிருப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தாமல் வணிக நிறுவனங்களுக்கான கட்டணத்தை மட்டும் உயர்த்தினாலும், அந்நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் விலை உயர்வானது நேரடியாக பொதுமக்களின் மீதே சுமையாக ஏறும் என்பதை அரசு உணர வேண்டும்.

எனவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை காரணம் காட்டி மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை முழுமையாக கைவிடுவதே மின்கட்டண உயர்விலிருந்தும், விலைவாசி உயர்விலிருந்தும் பொதுமக்களை காக்கும் ஒரே வழியாக அமையும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b