Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 17 ஜூன் (ஹி.ச.)
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
பாஜகவில் இருந்து பலரும் பிரிந்து சென்றுவிட்டதாகப் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை பாஜகவை விட்டு யாரும் வெளியே செல்லவில்லை. மாறாக, மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி பலரும் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 207 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் 40 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் தற்போது எத்தனை கொலைகள், எத்தனை கற்பழிப்புகள் நடந்துள்ளன என்பதைப் பட்டியலிட அரசு தயாராக இருக்கிறதா?
சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும், நேற்று 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முள்வேலியில் வீசப்பட்ட கொடூரமும் முதல்வருக்குத் தெரியுமா? அவர் நாள்தோறும் தலைமைச்செயலகம் செல்கிறார், டிபன் சாப்பிடுகிறார், ஆனால் யாரிடமும் பேசுவதில்லை; சினிமாவில் இருப்பவர்களை மட்டுமே சந்தித்துப் பேசுகிறார்.
கரூரில் இறந்த உறவினர்களின் உடல்களைப் பனி உறை போட்டுப் பார்த்தது போல, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அவர் பனையூரில் பார்க்கலாம் என நினைக்கிறார் போல.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறுவது ஒரு தவறான செயல்பாடு. இதில் பெரிய அளவில் குதிரை பேரம் நடந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தவறு செய்த தமிழக அரசைத் தண்டித்து, ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்
அம்பாசமுத்திரத்தில் இடைத்தேர்தல் வரப்போகிறது. அங்கே யாராவது இறந்து போனார்களா என்று தெரியவில்லை. அடுத்ததாக விராலிமலை, மதுராந்தகம், ஈரோடு, பெருந்துறை ஆகிய தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வரவுள்ளது.
ஆதவ் அர்ஜுனா ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரையும் விலைபேசி வாங்கிக் கொண்டிருக்கிறார். இடைத்தேர்தல் வருவதற்கு என்ன அவசியம் இருக்கிறது? அரசுப் பணத்தை வீணாகச் செலவு செய்யும் இத்தகைய செயல்பாடுகள் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகின்றன. அவகாசம் கொடுக்க முடியாத அளவிற்கு மோசமான சூழலை நோக்கி அரசு சென்று கொண்டிருக்கிறது
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்து ரூபாய் பாட்டில் என்று பாட்டுப் பாடியவர்கள், தற்போது பெரிய அளவில் வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால், அமைச்சர் உச்ச நீதிமன்றம் சொன்னதாகக் கூறி மழுப்புகிறார். முதல்வர் ஆட்சிக்கு வந்த பிறகு தொடக்கத்தில் அதிர்ச்சியிலும், தற்போது முதிர்ச்சியின்றியும் இருக்கிறார்.
உதயநிதியின் செயல்பாடுகள் துணை முதல்வராக இருந்தபோதும் சரியில்லை, எதிர்க்கட்சித் தலைவராக இருகிறபோதும் சரியில்லை.
சட்டப்பேரவையில் இதுவரை முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் வைக்கப்படவில்லை. ஆனால், கூட்டணி தர்மத்திற்காக கலைஞர் புகைப்படம் வைக்கப்பட்டபோது நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டோம்.
தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான்.
கூட்டணி குறித்த முடிவுகள் தேர்தல் வரும்போதுதான் எடுக்கப்படும். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. வரும் காலம் நிச்சயம் பாஜக காலமாகத்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b