Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 18 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா சிறப்புகளை உலகறியச் செய்யும் வகையில், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ‘குமரி திருவிழா’ பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியின் பண்பாடு, கலை, கைவினை மற்றும் உணவு வகைகளை ஒரே தளத்தில் வெளிப்படுத்தும் வகையில் இந்த திருவிழா திட்டமிடப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள், கைவினைப் பொருட்கள் கண்காட்சி, உள்ளூர் உணவுத் திருவிழா மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் சிறப்பு ஒளி அலங்காரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில், உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதுடன், கன்னியாகுமரியின் சுற்றுலாத் தலங்களுக்கான வருகையை அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b