அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் - அன்புமணி இராமதாஸ்
சென்னை, 18 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் கனிமவளக் கொள்ளையைத் தடுத்தல் தொடர்பாக ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித
Anbumani


சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் கனிமவளக் கொள்ளையைத் தடுத்தல் தொடர்பாக ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொழில் தொடங்குவதற்கான சூழலை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தொழில் முதலீட்டை ஊக்குவிக்க தொழில் முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும் என்றும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

பா.ம.க. பத்தாண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்த யோசனைக்கு தற்போது செயல்வடிவம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ள கனிமவளக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் தனியாருக்கு சென்ற வருவாயை அரசுக்கு திருப்பிக் கொண்டு வரப்படும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வரவேற்றுள்ளார்.

அதேநேரத்தில், அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 5 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்புவதற்கான திட்டம் குறித்து எதுவும் கூறப்படாதது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவை எப்போது, எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளுநர் உரையில் இடம்பெற்ற பெரும்பாலான அறிவிப்புகள் மேலோட்டமானவையாக உள்ளதாகவும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டு மக்களும் இளைஞர்களும் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ