Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)
மாவோயிஸ்ட் அமைப்பால் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் மருத்துவக் கல்விக் கட்டணம் தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) முடக்கப்பட்டதால், சான்றிதழ்களை வழங்க மறுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு பயிலும் மாணவிக்கு, பீகார் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து ரூ.1.13 கோடி கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டதாகக் கூறி, அந்தத் தொகையை தேசிய புலனாய்வு முகமை முடக்கியிருந்தது.
இதன் காரணமாக, மாணவிக்கு கல்விச் சான்றிதழ்களை வழங்க கல்லூரி நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கல்விக் கட்டணத்தை மீண்டும் செலுத்துமாறு வற்புறுத்தாமல் தனது சான்றிதழ்களை வழங்க கல்லூரிக்கு உத்தரவிடக் கோரி மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்விக் கட்டணமாக செலுத்தப்பட்ட தொகை தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில், சான்றிதழ்களை வழங்குமாறு கல்லூரி நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர்.
மேலும், முடக்கப்பட்ட தொகையை விடுவிக்கக் கோரி சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தை மாணவி அணுகலாம் அல்லது புதிதாக கல்விக் கட்டணத்தைச் செலுத்தி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, மாணவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ