Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூன் (ஹி.ச)
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நாளை (ஜூன் 19) தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.
வணிக மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களின் அமலாக்கம், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்படுவதாக கூறப்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளதாக சிபிஐ(எம்) தெரிவித்துள்ளது.
சென்னையில் குறளகம் அருகே காலை 10.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றுகிறார். தாம்பரம் சண்முகம் சாலையில் மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் கலந்து கொள்கிறார். வடசென்னை சர்மா நகரில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் உரையாற்ற உள்ளார்.
மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் மாநில செயலாளர் பெ. சண்முகம் (திருவாரூர்), அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி (தஞ்சாவூர்), மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி (விருதுநகர்), மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் (திருச்சி) உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்ற உள்ளனர்.
மேலும் கோவை, மதுரை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஊடகங்கள் நேரில் சென்று செய்தி சேகரித்து வெளியிட வேண்டும் என்றும் சிபிஐ(எம்) சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ