Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 18 ஜூன் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே நவாபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவிலில் நடைபெற்ற அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் அக்னி வசந்த விழா 18 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது.
விழாவையொட்டி தினந்தோறும் பாரத சொற்பொழிவுகள், மகாபாரதக் கதைகளை மையமாகக் கொண்ட தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் 18-வது நாளை முன்னிட்டு காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற அக்னி குண்டம் இறங்கும் நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இந்த விழாவில் கெங்கவரம், கிடாம்பாளையம், ஆதமங்கலம்புதூர், வீரலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P