Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகுகளில் இருந்த 20 மீனவர்கள், ஆந்திர கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாநில கடலோர பாதுகாப்பு படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களையும், படகுகளையும் ஆந்திர அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தகவல் அறிந்த காசிமேடு பகுதி மீனவர்கள், சக மீனவர்களை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி சென்னை காசிமேடு மீன்பிடி உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காசிமேடு மீன்பிடி உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், ஆந்திர அரசுடன் பேசி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக ஆந்திர அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
அடிக்கடி தமிழக மீனவர்கள் ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதால், மத்திய மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
Hindusthan Samachar / vidya.b