Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 ஜூன் (ஹி.ச)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் ஆற்றிய உரை, புதிய தவெக அரசின் கொள்கை விளக்கமாக அமைந்துள்ளதாகவும், அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அறிவிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாகவும் மாநிலச் செயலாளர் சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வைப் பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.
மேலும், கனிமவளக் கொள்ளையைத் தடுத்து அரசின் வருவாயை அதிகரிப்பது, வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வது, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், சமூக நீதி, தொழில் வளர்ச்சி, கல்வி மற்றும் மொழிக் கொள்கை தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், தவெக அரசின் அடிப்படைக் கொள்கையாக சாதி வாரி இடஒதுக்கீட்டை முன்வைப்பது ஏற்க முடியாதது என்றும், அது சமூக நீதி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கும் என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள அவர், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பல்வேறு வகையான தற்காலிக பணிகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள போதிலும், லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் அனைத்து இடங்களும் நிரப்பப்படுமா என்ற சந்தேகம் எழுவதாக சண்முகம் தெரிவித்துள்ளார். அதேபோல், தினக்கூலி, ஒப்பந்தக் கூலி, வெளிமுகமை ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள அவர், கோவில் சொத்துக்கள் புனிதமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கோவில்களின் சார்பில் இயங்கும் கல்வி நிறுவனங்களும் அந்த புனித நோக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி வழங்குதல் மற்றும் பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துதல் போன்ற அம்சங்களிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
பொதுவாக ஆளுநர் உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாகவும், அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் மீது தவெக அரசு உரிய கவனம் செலுத்தி செயல்படும் என நம்புவதாகவும் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ