Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் ஆளுநர் அர்லேகர் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின் அவை முனைவர் செங்கோட்டையன், சட்டமன்ற செயலாளர் சாந்தி ஆகியோர் தமிழக ஆளுநரை வரவேற்றனர். திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் வந்திருந்த நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியது.
தொடர்ந்து ஆளுநர் ஆற்றிய உரையில் கூறியதாவது,
ஜனநாயகத்தில் மக்கள் தான் நாயகர்கள் என அண்ணாவின் கூற்றை சுக்காட்டி பேசிய ஆளுநர் அண்ணா,பெரியார் உள்ளிட்டோர் பெயர்களையும் குறிப்பிட்டார். அதேபோல தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், காமராஜர் பெயர்களை அறிவித்த அவர் பெயர்களை தவறாக உச்சரித்து இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துக் கொண்டார்.
1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஏற்படுத்திய அரசியல் புரட்சியை 2026 ஆம் ஆண்டில் ஏற்படுத்தி உள்ளார் முதல்வர் விஜய். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் இந்த ஆட்சி இருக்கும். தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில் கட்சி தொடங்கிய இரு ஆண்டுகளில் தவெக ஆட்சி அமைத்துள்ளது.
தமிழக அரசியலில் இப்படி ஒரு புரட்சி நடந்துள்ளது. ஜாதி, மதம், இனம் என எந்த வேறுபாடுகளும் இல்லாமல் அதை எல்லாம் கடந்து மக்கள் தவெகவை ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.
தனி ஒருவராக வரலாற்றுப் புரட்சியை விஜய் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கூட்டணி ஆட்சி மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும். தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அரசுத் துறையில் ஊழல் லஞ்சம் ஒழிக்கப்படும். தவறு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும்.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப் பெண்கள் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற கிளையை சென்னைக்கு கொண்டு வர வேண்டும். இயற்கை வள கொள்ளையை தடுத்து தமிழகத்தின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.மேகதாது அணை கட்டுவதை நிறுத்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவிரியில் தமிழகத்திற்கு உபரி நீரை மட்டுமே கர்நாடக அரசு கொடுத்து வருகிறது. சிறு குறு விவசாயிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட கேரள அரசு எடுக்கும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த பிறகு தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும். கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து சமூகத்திற்கும் உரிய பிரதிநிதித்துவம் தரும் சமூக நீதியை பின்பற்றுவதே இந்த அரசின் பிரதான நோக்கம். தமிழர் வரலாறு, பண்பாட்டை பாதுகாக்க இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.2031-ல் தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b