ஓசூர் அருகே ஒற்றைக் காட்டு யானை தாக்கி இளம் பெண் படுகாயம்
கிருஷ்ணகிரி, 18 ஜூன் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அந்தேவனப்பள்ளி அருகே வனப்பகுதியை ஒட்டிய ஆலஹள்ளி கிராமத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சில குடும்பத்தினர் நர்சரிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 18 வயதான ரீ
Elephant


கிருஷ்ணகிரி, 18 ஜூன் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அந்தேவனப்பள்ளி அருகே வனப்பகுதியை ஒட்டிய ஆலஹள்ளி கிராமத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சில குடும்பத்தினர் நர்சரிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 18 வயதான ரீமா என்ற இளம் பெண் இயற்கை உபாதைக்காக அருகிலுள்ள பகுதியில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை திடீரென அவரை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யானை தாக்கியதில் ரீமாவின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டதுடன், அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த பொதுமக்கள் மற்றும் சக தொழிலாளர்கள் அவரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து ரீமா முதற்கட்ட சிகிச்சைக்காக இருதிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காயத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN