திரிபுனிதுரா அரசு ஆயுர்வேத கல்லூரியில் 25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி – ஷிகெல்லா தொற்று சந்தேகம்
மலப்புரம் , 18 ஜூன் (ஹி.ச.) கேரள மாநிலம், திரிபுனிதுரா பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஷிகெல்லா பாக்டீரியா தொற்று அதிகரித்து வரு
A


மலப்புரம் , 18 ஜூன் (ஹி.ச.)

கேரள மாநிலம், திரிபுனிதுரா பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

ஷிகெல்லா பாக்டீரியா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால், இது அந்த தொற்றின் தாக்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிக்கு ஒரு வார கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலில் மாணவிகள் விடுதியில் அறிகுறிகள் தெரியவந்த நிலையில், பின்னர் மாணவர்கள் விடுதியிலும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து விடுதி தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அதேபோல் பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்தும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்த பாதிப்பு ஷிகெல்லா தொற்றா அல்லது வேறு பாக்டீரியா தொற்றா என்பது ஆய்வு முடிவுகளுக்குப் பிறகே உறுதி செய்யப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கேரள சுகாதாரத் துறை அமைச்சர் முரளீதரன் கூறுகையில்,

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 146 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஜூன் மாதத்தில் மட்டும் 70 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கேரளாவின் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தொற்று வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து மாநில அரசு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA