கோவில்பட்டி அம்மா உணவகத்தில் தனியார் ஹோட்டல்களுக்கு இட்லி விற்பனை செய்யப்படுவதாக புகார் எதிரொலி - நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் திடீர் ஆய்வு
தூத்துக்குடி, 18 ஜூன் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள் தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அம்மா உணவகத்திற்கு சாப்பிட வருபவர்களுக்கு இட்லிகள் கிடைப்ப
அம்மா உணவகம்


தூத்துக்குடி, 18 ஜூன் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள் தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அம்மா உணவகத்திற்கு சாப்பிட வருபவர்களுக்கு இட்லிகள் கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் இட்லிகள் சில ஹோட்டல்களில் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை அம்மா உணவகத்தில் நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இட்லி வாங்குவதற்கான டோக்கன் வழங்கும் கவுண்டர், இட்லி விநியோகப் பகுதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அம்மா உணவக உணவுகளை பார்சலாக வழங்கக் கூடாது என்றும், உணவகத்தில் அமர்ந்து உணவருந்த பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது கோவில்பட்டி நகராட்சி ஆணையர் சுகந்தி உடனிருந்தார்.

இன்று பார்சல் வாங்க வந்தவர்களுக்கு இட்லி வழங்க மறுக்கப்பட்ட நிலையில், டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டும் இட்லி வழங்கப்பட்டு, அம்மா உணவகத்திலேயே அமர்ந்து உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் பார்சல் வாங்க வந்த சிலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வழக்கமாக அம்மா உணவகம் திறந்த சில நிமிடங்களிலேயே இட்லி தீர்ந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இன்று பொதுமக்கள் போதுமான அளவில் இட்லி கிடைத்து அமர்ந்து உணவருந்தியதால் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam