Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூன் (ஹி.ச)
தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் மற்றும் ஆளுநர் அர்லேகர் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின் அவை முனைவர் செங்கோட்டையன், சட்டமன்ற செயலாளர் சாந்தி ஆகியோர் தமிழக ஆளுநரை வரவேற்றனர்.
திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் வந்திருந்த நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியது.
ஆளுநர் உரைக்கு பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது,
தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு, இந்த வாழ்வு தமிழ் தந்தது.
எனவே எப்போதும் தமிழுக்கே முதலிடம். ஒன்றிய அரசின் சுற்றறிக்கையின் படி வந்தே மாதரம் முதலில் பாடவேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதனை கடைப்பிடிக்காமல், தமிழக அரசின் நிலைப்பாட்டின்படி தமிழ்த்தாய் வாழ்த்து இன்று முதலில் பாடப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைக்கு ஒரு கண்ணியமும், மாண்பும் இருக்கிறது. ஜனநாயகப்பூர்வமாக எதிர்க்கட்சிகள் அவர்களின் எதிர்வினையை ஆற்றலாம். இன்றைய தினத்தில் கூட திமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
எதிர்க்கட்சிகள் அவர்களின் எதிர்ப்பை காட்டலாம். ஆனால், அவர்கள் சென்ற ஆட்சியில் அப்படி வந்திருக்க வேண்டும். கொஞ்சம் கால தாமதமாக வந்துள்ளனர்.
பொது அமைதியையும், சட்டம் ஒழுங்கையும், நீதியையும் நிலைநாட்டுவதற்காக சிங்கப்பெண் சிறப்புப் படை உட்பட பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்கிறது.
எனவே இந்த பேட்ஜ்களை அவர்கள் கடந்த ஆட்சியில் அணிந்து வந்திருக்க வேண்டும்.
இன்றைய ஆளுநர் உரை நல்ல முறையில் தொடங்கியுள்ளது. தொடக்கம் நல்ல முழக்கமாக இருக்கிறது. இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.
அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். 2024ல் சராசரியாக ஒரு நாளைக்கு 30 வழக்குகள் பதியப்பட்டதாக சொல்கிறார்கள்.
இப்போது அதைவிட குற்றங்கள் குறைந்துள்ளன. காவல் நிலையங்கள் மீதான பாதுகாப்பு உணர்வு அதிகரித்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் வெளியில் வருகின்றனர்.
இப்போதைய ஆட்சியில் எந்த பாரபட்சமும் இல்லாமல் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிகபட்சமான தண்டனை பெற்றுத்தர வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதி கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தும், சமூக நீதி கணக்காய்வை மாநில அரசு நடத்தும்.
கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார் முதல்வர் விஜய். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும்.
இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்துக்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b