Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 18 ஜூன் (ஹி.ச.)
கரூர் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி பேருந்து, மதுராந்தகம் அருகே அறப்பேடு பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அதே சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த போர்வெல் பணிக்காக பயன்படுத்தப்படும் டிராக்டர் மீது பேருந்து மோதியதாக கூறப்படுகிறது.
மோதலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையின் நடுப்பகுதியில் கவிழ்ந்தது.
பேருந்தில் மொத்தம் 36 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் கரூர் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 18-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அச்சரப்பாக்கம் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கவிழ்ந்து கிடந்த பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலர் மேல்சிகிச்சைக்காக பிற மருத்துவமனைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / ANANDHAN