பெரியார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு
கள்ளக்குறிச்சி, 18 ஜூன் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்
Periyar Falls


கள்ளக்குறிச்சி, 18 ஜூன் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கல்வராயன் மலைப்பகுதியில் இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் உள்ள ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.

அதன் தாக்கமாக, கல்வராயன் மலை அருகே உள்ள குண்டியாநத்தம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு போன்ற சூழல் உருவாகியுள்ளது.

அருவியில் அதிகளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

மேலும், மலைப்பகுதிகளில் இருந்து அடித்து வரும் நீர் செந்நிறத்தில் காணப்படுவதால், அருவி வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இதனை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அப்பகுதிக்கு வருகை தந்து வருகின்றனர்.

இந்நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அருவிப் பகுதியில் வழுக்கும் தன்மை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாலும், சுற்றுலாப் பயணிகள் அருவியில் இறங்கி குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக அருவிப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், எச்சரிக்கை அறிவிப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN