Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 18 ஜூன் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் இருந்து களக்காடு செல்லும் பிரதான சாலையில் கங்கனாகுளம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற இனோவா கார் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
கார் மளமளவென எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.
தகவலறிந்த சேரன்மகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பாபநாச பெருமாள் (38) என்பவர் தனது தம்பி முத்துக்குமாருக்கு சொந்தமான இனோவா காரை தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், இருவருக்கும் இடையே நீண்ட காலமாக குடும்ப சொத்து தொடர்பான தகராறு இருந்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆத்திரமடைந்த பாபநாச பெருமாள் தனது தம்பியின் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து பாபநாச பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்த சேரன்மகாதேவி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப சொத்து தகராறு காரணமாக உடன்பிறந்த தம்பியின் விலை உயர்ந்த காரையே தீ வைத்து எரித்த அண்ணனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam