Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 18 ஜூன் (ஹி.ச.)
சேலம் இரும்பாலை அருகே மல்லமூப்பம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரும்பாலை பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள் மூன்று டாஸ்மாக் மதுக்கடைகள் அடுத்தடுத்து செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் அப்பகுதியில் குடியிருப்புவாசிகள், பெண்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக மல்லமூப்பம்பட்டியில் உள்ள மதுபானக் கடையின் முன்பு திரண்ட பொதுமக்கள், கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அனுமதிக்கக் கூடாது என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
பள்ளி, கோயில், மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் மதுக்கடைகள் இருப்பது விதிமுறைகளுக்கு முரணானது என்றும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மக்களின் அமைதியான வாழ்வை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b