சட்டவிரோதமாக இயங்கும் கிராவல் குவாரிகளை எதிர்த்து கடலூரில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
கடலூர், 18 ஜூன் (ஹி.ச.) கடலூர் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கிராவல் குவாரிகளை கண்டித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூ
சட்டவிரோதமாக இயங்கும் கிராவல் குவாரிகளை எதிர்த்து கடலூரில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


கடலூர், 18 ஜூன் (ஹி.ச.)

கடலூர் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கிராவல் குவாரிகளை கண்டித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து, கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி குவாரிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், அரசு அனுமதித்த அளவையும், ஆழத்தையும் மீறி கிராவல் குவாரிகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.

இதனால் தங்கள் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும், கனரக வாகனங்களின் தொடர் போக்குவரத்தால் சாலைகள் சேதமடைவதோடு, அதிகப்படியான தூசு காரணமாக சுவாச பிரச்சினைகள் மற்றும் உடல்நலக் கேடுகள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.

சட்டவிரோதமாக இயங்கும் இந்த குவாரிகளால் விளைநிலங்கள் பாழாவதாகவும், சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர்.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, முறைகேடாக செயல்படும் அனைத்து கிராவல் குவாரிகளையும் ஆய்வு செய்து மூட வேண்டும் என்றும், நிலத்தடி நீரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Hindusthan Samachar / vidya.b