300 ஆண்டுகள் பழமையான காமாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்
ராமநாதபுரம், 18 ஜூன் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சி மேற்கு தெருவில் அமைந்துள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆலமரத்தை தலவிருட்ச
காமாட்சி அம்மன்


ராமநாதபுரம், 18 ஜூன் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சி மேற்கு தெருவில் அமைந்துள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஆலமரத்தை தலவிருட்சமாகக் கொண்டு விளங்கும் இவ்வாலயத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மனுடன் ஸ்ரீ காத்தவராயன் சுவாமி, ஸ்ரீ கருப்பணசுவாமி ஆகிய பரிவார தெய்வங்களும் எழுந்தருளியுள்ளன.

மூன்று சமுதாய மக்களின் குலதெய்வமாக வழிபடப்படும் இந்த ஆலயம் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வம்சாவழியினர் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணிகளை மேற்கொண்டனர்.

திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஜூன் 16ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை நான்காம் கால யாக பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 10.45 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை புதுமடம் மேற்கு தெரு காமாட்சி அம்மன் ஆலய அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், குலதெய்வ வம்சாவழியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam