Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டுக்கான வேளாண் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் மொத்தம் 6,852 இடங்களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 240 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பட்டுப்புழு வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு பெருமளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தரவரிசைப் பட்டியல் வெளியான பிறகு, மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடத்தப்படும்.
பொதுப் பிரிவு மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு தனித்தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முடிந்த பிறகு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் செப்டம்பர் 9-ஆம் தேதி திறக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் மேலும் விவரங்களுக்கு www.tnau.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.
Hindusthan Samachar / vidya.b