சேலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை- சாக்கடை நீர் கலந்து சாலைகளில் ஆறு போல் ஓடும் வெள்ளம்
சேலம், 18 ஜூன் (ஹி.ச) சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களும், வாகன ஓட்டிகளு
மழை


சேலம், 18 ஜூன் (ஹி.ச)

சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, நான்கு ரோடு, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து சாலையில் ஆறுபோல் ஓடுகிறது.

இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்.

மேலும், கழிவுநீர் கலந்த வெள்ளம் சாலைகளில் ஓடுவதால் சுகாதாரக் கேடும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam