Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 18 ஜூன் (ஹி.ச.)
சேலத்தில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மணிகண்டனின் செல்போன், மெமரி கார்டு மற்றும் பென்டிரைவ் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை போலீசார் சைபர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழக பிரமுகர் மணிகண்டன், பல பெண்களின் ஆபாசப் புகைப்படங்களை எடுத்து மிரட்டியதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், மணிகண்டனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், மெமரி கார்டுகள் மற்றும் பென்டிரைவ்களை தடயவியல் ஆய்வுக்காக சைபர் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
குறிப்பாக செல்போன்களில் இருந்த சில ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதால், அவற்றை மீட்டெடுக்கும் பணியில் சைபர் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தற்போது சிறையில் உள்ள மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நகர அனைத்து மகளிர் போலீசார் முடிவு செய்துள்ளதாகவும், அதன் மூலம் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P