பாதையை மறித்த இருசக்கர வாகனம் - தட்டிக்கேட்ட முதியவரை கல்லால் தாக்கிய கொடூரம்
சிவகங்கை, 18 ஜூன் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த பாலு (60), தனது வீட்டின் அருகே வசித்து வரும் பாலமுருகனிடம், பாதையை மறிக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு கேட்டதாக
தாக்குதல்


சிவகங்கை, 18 ஜூன் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே

கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த பாலு (60), தனது வீட்டின் அருகே வசித்து வரும் பாலமுருகனிடம், பாதையை மறிக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பாலமுருகன், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து பாலுவின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாலுவின் தலையில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியது.

படுகாயமடைந்த பாலு முதலில் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதியவர் மீது கல்லால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P