ஊடக பேட்டிக்காக சிஐடியு நிர்வாகி பணிநீக்கம் - கருத்துரிமை பறிப்பு என கண்டனம்
சென்னை, 18 ஜூன் (ஹி.ச) தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்ததற்காக சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஜான் (எ) ராதாகிருஷ்ணனை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது கருத்துரிமை மீதான தாக்குதல் என சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில ச
Tasmac Protest


Gg


சென்னை, 18 ஜூன் (ஹி.ச)

தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்ததற்காக சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஜான் (எ) ராதாகிருஷ்ணனை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது கருத்துரிமை மீதான தாக்குதல் என சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு தொழிற்சங்க நிர்வாகி என்ற அடிப்படையில் தனது கருத்துகளை ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், எந்தவித முன் விளக்கமும் கேட்காமல் டாஸ்மாக் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக அவரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாக சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.

முன் அனுமதி பெறாமல் பேட்டி அளித்தது, அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தது மற்றும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியது போன்ற காரணங்களை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பணிநீக்க காலத்தில் கோவையை விட்டு வெளியே செல்ல வேண்டுமெனில் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பது, ஒரு சமூக விரோதியைப் போல் தொழிற்சங்க நிர்வாகியை நடத்தும் செயல் எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தை அரசு மீறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சம்மேளனம், தேர்தல் காலத்தில் டாஸ்மாக் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விமர்சனம் செய்தவர்கள் தற்போது ஆட்சியில் இருந்து அதே விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.

முந்தைய ஆட்சிக் காலங்களிலும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததற்காக பல்வேறு அழுத்தங்களையும் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் சிஐடியு சம்மேளனம் எதிர்கொண்டுள்ளதாகவும், தற்போதைய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், தொழிற்சங்க செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.

எனவே, தொழிற்சங்க விரோத மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையாகக் கூறப்படும் இந்த தற்காலிக பணிநீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெறவும், டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ