Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 18 ஜூன் (ஹி.ச.)
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் தமிழக-கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக நாள்தோறும் சென்று வருகின்றன.
இப்படி கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், அவசர தேவைகளுக்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் சூழலும் நாள்தோறும் நிலவி வந்தன.
குறிப்பாக, புளியரை பகுதியில் நிலவி வந்த இந்த வாகன நெரிசல் காரணமாக ஏராளமான வாகன ஓட்டிகள் நாள்தோறும் சிரமத்திற்கு ஆளாகிவந்த நிலையில், தற்போது கனிம வள லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜித் சிங் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக, முன்னதாக ஒற்றைப்படை எண்கள், இரட்டைப்படை எண்கள் என வாகனங்களை பிரித்து ஒற்றைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் ஒருநாளும், இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் மற்றொரு நாளும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அதிலும் ஒரு சில முறைகேடுகள் நடைபெற்று தொடர்ந்து வாகன நெரிசலானது ஏற்பட்டு வந்தன.
இந்த நிலையில், தற்போது வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையும், இரவு 11:00 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும் கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்லலாம் எனவும், அதேபோல் குற்றால சீசனை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் திங்கட்கிழமை காலை 11:00 மணி வரை கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் கேரளாவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீறி செயல்படும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN