தவெக நிர்வாகி மீது பல கோடி மோசடி புகார் - எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற வியாபாரி
ஈரோடு 18 ஜூன் (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியைச் சேர்ந்த அரிசி மொத்த வியாபாரி மனோகரன், ஈரோட்டைச் சேர்ந்த நந்தகோபால், தேவி, லோகு ஆகியோருக்கு கடந்த 2025-ம் ஆண்டு ரூ.19 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகளை விற்பனை செய்துள்ளார். இதில் ரூ.4
ஈரோடு எஸ்.பி அலுவலகம்


ஈரோடு 18 ஜூன் (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியைச் சேர்ந்த அரிசி மொத்த வியாபாரி மனோகரன், ஈரோட்டைச் சேர்ந்த நந்தகோபால், தேவி, லோகு ஆகியோருக்கு கடந்த 2025-ம் ஆண்டு ரூ.19 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகளை விற்பனை செய்துள்ளார்.

இதில் ரூ.4 லட்சம் மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.15 லட்சம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேபோல், திருச்சியைச் சேர்ந்த ரைஸ் மில் உரிமையாளர் ராஜாவிடமும், ‘கணேஷ் டிரேடர்ஸ்’ என்ற பெயரில் தொடர்பு கொண்டு ரூ.1.03 கோடி மதிப்பிலான அரிசி மூட்டைகள் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதில் ரூ.18 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு, மீதமுள்ள ரூ.85 லட்சத்தை ஒரு வாரத்தில் தருவதாக உறுதியளித்தும் பின்னர் பணம் வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்களது பணத்தை மீட்டுத் தரவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மனோகரன் மற்றும் ராஜா ஆகியோர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வந்தனர்.

அப்போது, மனோகரன் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது உடலிலும், மனைவி ஷீலா மற்றும் மகன் மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றி மீட்டு விசாரணைக்காக உள்ளே அழைத்துச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரைஸ் மில் உரிமையாளர் ராஜா,

நந்தகோபால், தேவி, லோகு, பகதூர் பாஷா உள்ளிட்டோர் மளிகை மற்றும் அரிசி பொருட்கள் மொத்த வியாபாரம் என்ற பெயரில் பலரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த விவகாரத்தின் பின்னணியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் அருண் இருப்பதாகவும், அவரை பலமுறை தொடர்புகொண்டு பணம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மளிகை மற்றும் அரிசி வியாபாரிகள் பலரையும் ஏமாற்றியதாக கூறப்படும் இந்த கும்பல் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இன்று மட்டும் புகார் அளித்துள்ள மனோகரன் மற்றும் ராஜா ஆகிய இருவரும் சேர்த்து சுமார் ரூ.1 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பலரும் இதே கும்பலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam