Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 18 ஜூன் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே
உஞ்சனை குட்டிக்காபாளையத்தைச் சேர்ந்த மாசிலாமணி என்பவர், குமரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக திருச்செங்கோடு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் நவீன் கடந்த சில நாட்களாக தன்னை காரில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் எளையாம்பாளையம் பிரிவு சாலை அருகே இயற்கை உபாதைக்காக சென்றிருந்த போது, தனது நண்பர்களுடன் காரில் வந்த நவீன் தன்னை காரில் ஏறுமாறு வற்புறுத்தியதாகவும், மறுத்தபோது கையை முறுக்கி தாக்கியதுடன் சாதிப் பெயரை கூறி திட்டியதாகவும் மாசிலாமணி தெரிவித்துள்ளார்.
சத்தமிட்டதால் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில், காயமடைந்த மாசிலாமணி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், புகார் அளித்து இரண்டு நாட்கள் கடந்தும் காவல்துறையினர் தன்னிடம் முறையான விசாரணை நடத்தவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam