தீண்டாமை வன்கொடுமை புகார்கள் மீது முன்விசாரணையின்றி உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை, 19 ஜூன் (ஹி.ச.) சாதி பெயரைக் குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக அருண்குமார் என்பவர் அளித்த புகாரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப
தீண்டாமை வன்கொடுமை புகார்கள் மீது முன்விசாரணையின்றி உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு


மதுரை, 19 ஜூன் (ஹி.ச.)

சாதி பெயரைக் குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக அருண்குமார் என்பவர் அளித்த புகாரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையில் தீண்டாமை வன்கொடுமை புகார்களில், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக முன்விசாரணை நடத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த நீதிமன்றம், இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் நடத்திய விசாரணை செல்லாது என்று சுட்டிக்காட்டியது.

மேலும், விசாரணை செல்லாது என்ற நிலையில் புகாரை முடித்து வைத்தது சட்டவிரோதமானது என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

புகாரில் வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருந்தால், எந்தவித தாமதமும் இன்றி, முன்விசாரணை இல்லாமல் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், அருண்குமார் தொடர்ந்த வழக்கு தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு, தீண்டாமை வன்கொடுமை புகார்களில் காவல்துறையின் அலட்சியப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b