பிலிகுண்டுலு அணைக்கு காவிரி நீர்வரத்து இருமடங்காக அதிகரிப்பு - வினாடிக்கு 4,000 கனஅடியை எட்டியது
கிருஷ்ணகிரி, 19 ஜூன் (ஹி.ச.) காவிரி ஆற்றின் நீர்வரப்பைக் கணக்கிடும் மத்திய நீர் ஆணையத்தின் முக்கிய நீர் அளவீட்டு நிலையமாக உள்ள பிலிகுண்டுலு அணை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி வட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவி
Cauvery water inflow to Biligundlu dam doubles


கிருஷ்ணகிரி, 19 ஜூன் (ஹி.ச.)

காவிரி ஆற்றின் நீர்வரப்பைக் கணக்கிடும் மத்திய நீர் ஆணையத்தின் முக்கிய நீர் அளவீட்டு நிலையமாக உள்ள பிலிகுண்டுலு அணை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி வட்டத்தில் அமைந்துள்ளது.

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்து கடந்த சில மணி நேரங்களில் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.

இன்று காலையில் வினாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது இருமடங்காக அதிகரித்து வினாடிக்கு 4,000 கன அடியாக பாய்ந்து வருகிறது என மத்திய நீர்வள ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு மற்றும் மண்டியா மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக பெய்து வரும் கனமழையே இந்த நீர்வரத்து உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அடுத்த 48 மணி நேரத்தில் உயர வாய்ப்புள்ளது.

இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், காவிரி கரையோரப் பகுதிகளான ஒகேனக்கல், பிலிகுண்டுலு, ஈரோடு மாவட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பரிசல் இயக்கம் மற்றும் குளியலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்வரத்து நிலவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b