Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 19 ஜூன் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், தொடர்ச்சியான கனமழையால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பெய்த மழையால் செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. நல்ல விளைச்சல் கிடைத்ததால், விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்தனர்.
மாவட்டம் முழுவதும் 92 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஆன்லைன் முன்பதிவு முறையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சாஸ்திரம்பாக்கம் பகுதியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
கடந்த ஒரு மாதமாக இந்த நெல் மூட்டைகளை நிரந்தர சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மூட்டைகளுக்குள் உள்ள நெல் மணிகள் முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பெரும் பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, சேதமடைந்த நெல் மூட்டைகளை உடனடியாக அரிசி ஆலைகளுக்கு அனுப்பி பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய சேமிப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam