சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா சிக்கியது
சென்னை, 19 ஜூன் (ஹி.ச.) . தாய்லாந்து நாட்டிலிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.11 கோடி மதிப்பிலான 11 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட க
கஞ்சா


சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)

.

தாய்லாந்து நாட்டிலிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.11 கோடி மதிப்பிலான 11 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, மேல்நடவடிக்கைக்காக நார்கோட்டிக் கண்ட்ரோல் பீரோ (என்சிபி) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தாய்லாந்திலிருந்து பெரிய அளவில் போதைப்பொருள் சென்னைக்கு கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையின் ஏர் இன்டெலிஜென்ஸ் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளாக தாய்லாந்து சென்று மறுநாளே இந்தியா திரும்பியிருந்ததால் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததை அடுத்து, அவர்களது உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது உணவுப் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரின் உடைமைகளில் இருந்து மொத்தம் 11 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஒருவரிடம் 5 கிலோவும், மற்றொருவரிடம் 6 கிலோவும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.11 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்காக ‘கடத்தல் குருவிகள்’ (Carrier) ஆக செயல்பட்டதாகவும், வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் பணத்திற்காக இந்த கடத்தலில் ஈடுபட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த பின்னர், போதைப்பொருளை கும்பல் உறுப்பினர்களிடம் ஒப்படைத்து அதற்காக லட்சக்கணக்கில் பணம் பெற திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், 6 கிலோ போதைப்பொருளுடன் பிடிபட்ட நபர் தொடர்பாக ஏற்கனவே என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்ததால், அவரை மேலதிக விசாரணைக்காக நார்கோட்டிக் கண்ட்ரோல் பீரோ அதிகாரிகளிடம் சுங்கத்துறை ஒப்படைத்துள்ளது.

இந்த போதைப்பொருளை சென்னையில் பெற இருந்த நபர்கள் யார், இதன் பின்னணியில் செயல்படும் சர்வதேச கடத்தல் வலையமைப்பு எது என்பது குறித்து சுங்கத்துறை மற்றும் என்சிபி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P