ஆளுநர் உரை ஆரோக்கியமான தொடக்கம், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு - அமைச்சர் ராஜேஷ் குமார்
தமிழ்நாடு, 19 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான செ. ராஜேஷ் குமார், தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை முழுமையாக வாசித்ததை வரவேற்றதுடன், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அ
ராஜேஷ்


தமிழ்நாடு, 19 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான செ. ராஜேஷ் குமார், தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை முழுமையாக வாசித்ததை வரவேற்றதுடன், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

த.வெ.க. அரசின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் உரை எவ்வித சர்ச்சையும் இன்றி ஆரோக்கியமான சூழலில் நடைபெற்றது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி முழுமையாக உரையை வாசிக்காமல் சென்றதோடு, பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களின் பெயர்களைத் தவிர்த்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

தற்போதைய ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் புன்சிரிப்புடன் வந்து, முழு உரையையும் வாசித்து முடித்து மகிழ்ச்சியுடன் சென்றது நல்ல தொடக்கம் எனக் கூறியுள்ள அவர், இதனை த.வெ.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான புரிந்துணர்வாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயக மாற்றம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

ஆளுநர் உரையில் மாநில உரிமைகள், நிதிப் பகிர்வு, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திணிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து தெளிவான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாநிலங்களுக்கு உரிய நிதியைப் பெற உச்சநீதிமன்றம் வரை செல்ல வல்லுநர் குழு அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் ஒரு செங்கல்லைக்கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்ற அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிப்பதாக கூறியுள்ள அவர், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள சிறப்புத் தீர்மானத்திற்கும் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், த.வெ.க. அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை கடந்த ஆட்சியின் நிதிநிலையை வெளிப்படையாக எடுத்துரைப்பதாகவும், மாநிலத்தின் கடன் சுமை, வட்டி செலவு மற்றும் வருவாய் இழப்புகள் குறித்து உண்மை நிலையை மக்களிடம் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு மூலம் 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு ஆறு மாதங்கள் விமர்சிக்க மாட்டோம் என அறிவித்த திமுக, தற்போது ஒரு மாத ஆட்சியிலேயே கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுநர் உரை தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான தெளிவான பாதையை வகுத்துள்ளதாகவும், மலிவான அரசியல் விமர்சனங்களால் அரசின் வளர்ச்சி பயணத்தை திசைதிருப்ப முடியாது என்றும் அமைச்சர் ராஜேஷ் குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P