Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா , 19 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தை தொழில்துறை மற்றும் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கொல்கத்தாவில் முன்னணி தொழில்துறையினருடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
விஸா ஸ்டீல், இமாமி குழுமம், ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்த சந்திப்பில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் நாரா லோகேஷ்,
ஆந்திரப் பிரதேசம் கடற்கரை மாநிலமாக இருப்பதால் துறைமுகங்கள், லாஜிஸ்டிக்ஸ் வசதிகள், தொழில் நிலங்கள், தொடர்ச்சியான மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் மிகுந்து காணப்படுவதாகவும், இது பெரிய அளவிலான முதலீடுகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தி வருவதாகவும், அதனுடன் இணைந்து ஆந்திரப் பிரதேச அரசு தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காக பல்வேறு திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அனகாப்பள்ளி பகுதியில் நடைபெற்று வரும் அர்செலர் மிட்டல்–நிப்பான் ஸ்டீல் போன்ற மிகப்பெரிய தொழில் முதலீட்டு திட்டங்கள் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தொழில்துறையினர், ஆந்திர அரசின் முதலீடு ஆதரவு கொள்கைகள் மற்றும் விரைவான நடவடிக்கைகளை பாராட்டியதுடன், மாநில வளர்ச்சியில் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு ஆந்திரப் பிரதேசத்தை முன்னணி தொழில்துறை மற்றும் உற்பத்தி மையமாக உயர்த்தும் முயற்சியில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA