மகளிருக்கு ரூ.2,500 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
திருவள்ளூர் 19 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில்
எல்.முருகன்


திருவள்ளூர் 19 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று சாமி தரிசனம் செய்தார்.

கோவிலில் விநாயகர், மூலவர், ஆதிமூலவர், பைரவர் மற்றும் நவகிரக சன்னதிகளில் வழிபாடு நடத்திய அவர், கொடிமரத்தின் முன்பாகவும் வணங்கி பிரார்த்தனை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் மக்கள் நலன் தொடர்பான கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது பேசிய எல்.முருகன்,

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்று குற்றம்சாட்டினார். மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், “சொன்னதைச் செய்பவர்கள் பாஜக. ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

நிதிநிலை சரியில்லை என வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களை ஏமாற்றக் கூடாது. அரசை நம்பி வாக்களித்த பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை வகுத்து உடனடியாக நிதி வழங்க வேண்டும்” என்றார்.

கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது பெண் குழந்தைக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், “சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு விவகாரங்களில் தற்போதைய அரசுக்கும் முந்தைய திமுக அரசுக்கும் பெரிய வேறுபாடு இல்லை” என விமர்சித்தார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக களத்தில் இறங்கி நிலைமைகளை சீரமைக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பையும் சட்டம்-ஒழுங்கையும் உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P