Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜூன் (ஹி.ச.)
டெல்லியில் வரும் செவ்வாய்க்கிழமை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52வது கூட்டம் நடைபெறவுள்ளது.
கர்நாடகா அரசின் மேகதாது அணை கோரிக்கை பின்னணியில் நடைபெறும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான விவகாரங்களை கண்காணித்து வரும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52வது கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. ஆணையத் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை, அணைகளின் நீர் இருப்பு, தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியிருந்தார். மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் கூட்டத்தில் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும், காவிரி நீர் பங்கீடு மற்றும் நீர் திறப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இந்தக் கூட்டம் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P