மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் - சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்
திருவாரூர், 19 ஜூன் (ஹி.ச.) திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை வரவேற்றதுடன், அணை கட்டும் எந
சண்முகம்


திருவாரூர், 19 ஜூன் (ஹி.ச.)

திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்,

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை வரவேற்றதுடன், அணை கட்டும் எந்த முயற்சியையும் தமிழக அரசு உறுதியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு விலைவாசி உயர்வு, தொழிலாளர் விரோதச் சட்டங்கள் மற்றும் 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றம் ஆகியவற்றைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சியை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என்றார்.

மேலும், காவிரி டெல்டா தமிழகத்தின் நெற்களஞ்சியம். அதன் பாதுகாப்பை உறுதி செய்ய காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் தடையின்றி வர வேண்டும். காவிரி என்பது கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் சொந்தமான நதி அல்ல; தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் உரியது. எனவே, காவிரியின் குறுக்கே எந்தப் பணியையும் ஒருதலைப்பட்சமாக மேற்கொள்வது சட்டவிரோதமானது என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி தொடர்பான தீர்ப்புகள் தெளிவாக உள்ள நிலையில், கீழ்ப்பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்றும், அனைத்து மாநில அரசுகளும் நீதிமன்றத் தீர்ப்புகளை மதித்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேகதாது அணை கட்டுவதைத் தடுக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு மாநில மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாக இருப்பார்கள் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக அரசுடன் இணைந்து உறுதுணையாக செயல்படும் என்றும் சண்முகம் தெரிவித்தார்.

கர்நாடகாவின் தற்போதைய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பல ஆண்டுகளாக மேகதாது அணை குறித்து பேசி வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்தை மட்டுமே அணுக முடியும்; தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P