மேகதாது அணை விவகாரத்தில் த.வெ.க. அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 19 ஜூன் (ஹி.ச.) மேகதாது அணை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ள
வானதி


தமிழ்நாடு, 19 ஜூன் (ஹி.ச.)

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மேகதாது அணை திட்டம் என் இதயத்துக்கு நெருக்கமானது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேகதாது அணை திட்டம் தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும், காவிரி நீரை நம்பியுள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் நலன் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என்றும், உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகளையும் கர்நாடக அரசு மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால், முதலமைச்சர் ஜோசப் விஜய், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை நேரில் சந்தித்து, மேகதாது அணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதில் காட்டப்படும் அரசியல் வேகத்தையும் திறமையையும், தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

வெறும் தீர்மானங்கள், கடிதங்கள் மற்றும் கோரிக்கைகளுடன் நிறுத்தாமல், மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான நேரடி அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு முழுமையாக தமிழகத்தின் நலனை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், அரசியல் கூட்டணி காரணமாக கர்நாடக அரசிடம் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கக் கூடாது என்றும் வானதி சீனிவாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P