Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மாநிலம் தழுவிய இந்தப் போராட்டத்தில், அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவும், கார்ப்பரேட் நலன்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறி, அவற்றை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 125 நாள் வேலையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும், கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b