மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை, 19 ஜூன் (ஹி.ச.) சென்னையில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சிக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முதல
சட்டப்பேரவை


சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)

சென்னையில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சிக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில், மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருவதாக தெரிவித்தார்.

மேகதாது பகுதியில் அணை கட்டப்பட்டால், காவிரி நீரின் இயல்பான ஓட்டம் பாதிக்கப்படுவதுடன், தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும், மேகதாது அணை திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக கர்நாடக அரசு செயல்பட முயற்சிப்பதாகக் கூறிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் நீர்வள உரிமையை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர், மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam