Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 19 ஜூன் (ஹி.ச.)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி, அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 539 கன அடியில் இருந்து 1,397 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 79.12 அடியாகவும், நீர் இருப்பு 41.085 டி.எம்.சி.யாகவும் பதிவாகியுள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து வெளியேற்றத்தை விட அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் தாக்கத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரவிருக்கும் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகளுக்கு தேவையான நீர் இருப்பு உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam